சங்க காலத்திலும் காதலர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
தலைவியும் தலைவனும் காண்கிறார்கள், களிக்கிறார்கள். ஆனால் களித்திருந்த காலங்களிலும் கூடத் தலைவி "திக் திக்" என்றே இருக்கிறாள். எங்கே அவன் விட்டுவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் மிகுதியாகவே இருக்கிறது. புலம்பித் தீர்க்கிறாள். இருவரும் பழகுவது ஊருக்குத் தெரிந்து அவர்கள் பங்கிற்கு கண்டதையும் பேசுகிறாள். தலைவிக்கு மேலும் பயமும் கவலையும் அதிகரிக்கிறது.
தலைவனிடம் நேரே கேட்கக் கூட பயமும் தயக்கமும் அவளுக்கு இருக்கிறது. அதனால் தோழியும் அவளும் தலைவன் காதில் விழும்படி சாடை மாடையாக காதல், திருமணம், ஊரார் பேச்சு என்றெல்லாம் கதைக்கிறார்கள். தலைவன் திரும்பி வரவேயில்லை என்றால் குருகையும் கூழையையும் சாட்சிக்கு வருவார்கள் என்று பிதற்றுகிறாள்.
ஒருவேளை தலைவன் திருமணத்திற்கு இசைந்தாலும் அதன் பிறகு இன்னும் சிக்கல்கள் தான். அந்தக் காலத்திலும் காதல் பட அப்பாக்கள் தான் அதிகம் போல. தலைவியை சிறை வைக்கிறார்கள், காதலை எதிர்க்கிறார்கள். தலைவனுக்கோ திருமணத்திற்கு பொருள் வேண்டும். பொருள் ஈட்டச் செல்கின்றான். அப்பொழுது தலைவிக்கு பயம் இன்னும் கூடிக் கொண்டே போகிறது. தலைவனின் பிரிவு, அவன் வருவான என்ற பயம், வீட்டுக்காவல், ஊரார் பேச்சு என்று தாங்க முடியாமல் உடல் மெலிந்து போகிறாள்.
தலைவன் வந்துவிட்டாலும் பெற்றோர் ஒன்றும் ஏற்பதாயில்லை. வேறு வழியில்லாமல் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். தோழி உதவுகிறாள். அட உடன்போக்கு என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது, போகிற வழியெல்லாம் சிக்கல் தான்.
ஒரு வழியாக தலைவனுடன் வாழத் தொடங்குகிறாள். அப்பாடா என்று இருக்கலாம் என்று பார்த்தால் தலைவன் பரத்தி வீட்டிற்குப் போகிறான். மீண்டும் புலம்பல் தொடங்குகிறது. எல்லாம் முடித்து மக்கட்செல்வம் வரும் போது தலைவி தாயாகும் போது அவளது மகள் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். அப்பொழுதும் மகளை நினைத்துப் புலம்புகிறாள்.
தலைவனின் வாழ்க்கை கொஞ்சம் வேறு மாதிரி. இப்பொழுது இருப்பது போலத் தான். தலைவியைப் பார்க்கிறான், காதலிக்கிறான். தலைவியும் ஏற்றால் களவொழுக்கும், இல்லையேல் " ஏத்துக்குவியா இல்லைனா கைய அறுத்துக்குவா" என்று கேட்கிறான். இல்லை இல்லை. அப்பொழுது கையை அறுக்கும் பழக்கம் இல்லை. அதனால் மடலேறுகிறான். ஊருக்கே இவனின் ஒருதலைக் காதல் தெரிய வருகிறது. ஊர் அவனை மட்டுமா பேசும் அவளையும் சேர்த்தே பேசும். தலைவிக்கு அப்பொழுதும் சிக்கல் தான், அதனால் வீட்டில் பிரச்சனை வேறு.
தலைவனும் தலைவியும் பார்த்தவுடன் தலைவியை வீட்டுக் காவலில் வைக்கிறார்கள். தலைவி வர முடியவில்லை என்று சொல்ல வந்த தோழியிடம் " அவள வர சொல்லுறியா இல்ல போலீச கூப்பிடவா" என்று கேட்கிறான் தலைவன். ஆமாம் தலைவி வரவில்லையென்றால் அரசனிடம் முறையிடுவேன் என்கிறேன்.
தலைவியும் அவனும் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்து பொருளீட்டச் சென்றால் அங்கும் அவனுக்குத் தலைவியின் நினைப்பு தான்.
2000 ஆண்டுகள் ஆனாலும் காதல் மட்டும் இன்று இருப்பது போலவே இருக்கிறது. காதலி காதலை ஏற்க மாட்டாள், விட்டுவிடுவாள் என்ற நினைப்பு வரும் போதே காதலன் தடாலடி முடிவெடுத்து தலைவியை சிக்கலில் மாட்டிவிட நினைக்கிறேன். ஆனால் தலைவியோ தோழியிடமும் பறவைகளிடமும் புலம்பிக் காலத்தைக் கழிக்கிறாள். இன்றும் இதே நிலை தானே..
No comments:
Post a Comment