Tuesday, 8 April 2014

மயில்விடு தூது!!! (முருகனுக்குத் தலைவி அனுப்பும் தூது)














மலைகளின் மன்னனிடம், திருச்செந்தூர்



அலைகளின் அரசனிடம் எந்தன்
நிலையை எடுத்துரைக்கும் தூதுக்
கலையை நீ அறிவாயோ???

காவல் கடந்தே காதல் சொல்ல,
சேவல் கொடியுடையானை நீ சென்றடைய
ஏவல் புரிந்தேனே! கெஞ்சியே உனக்கு
ஏவல் புரிந்தேனே! உயிர் மெலிந்தேனே.

உணவு துறந்தேன், நல்ல
உடை மறந்தேன், பகலில்
கனவில் தொலைந்தேன், அன்ன
நடையை இழந்தேன்- குமரன்

நினைவு வாட்ட விழிநீர்
மடை திறந்தேன் நானே!!!
துணையாக தூது செல்லாயோ??? உன்
விடையாது மயிலே சொல்லாயோ??



















'சித்தம் குழம்பியதோ? இவளுக்குப்
பித்தோ? பேயோ?' என
ஒத்த நோய்சொல்லி சுற்றம்
நித்தம் புலம்பியதே- அழகனே
மொத்தக் காரணம் என்று
சுத்த மொழியில் நீ செப்பாயோ???

ஒற்றைத் தலைக் காதலால்

சுற்றித் தலை சாய்கிறதே,
நெற்றிக் கண்ணுடையான் மகனைப்
பற்றி மனம் நோகிறதே...

உமையாள் மைந்தனை எண்ணி

இமைகள்  கருக அழுகின்றேன்.
தண்ணீரில் அழும் மீனாய்
கண்ணீரில் நானே கரைகின்றேன்...

அப்பன்சாமி முருகனை என்

சொப்பனத்தில் கண்டே களிக்கின்றேன்.
நேரில் வந்து நில்லானோ?? எனைத்
தேரில் ஏற்றிச் செல்லானோ??

ஆம்பலும் அல்லியும் அங்கே

கூம்பும் நேரம், அவனை
நாடுதே நெஞ்சம் நாளும்
கூடுதேயென்  நெஞ்சின் பாரம்.















மறையாத புகழுடையோன் மேலே
குறையாத காதல் கொண்டேனே!
விரைவாகச் சென்று நீயும்
நிறைவாக இதனை உரைப்பாயே!!

மயிலோன் மீது கொண்டது
மையல் இல்லை காதலென்று,
மயிலாள் நெஞ்சை மின்
மெயிலாய் மயிலே, மொழிவாயே!!!

வெயில் சாயும் முன்பே!
மதியும் காயும் முன்பே!
துயிலெனைக் கொல்லும் முன்பே!
விதியும் உயிர்க் கொள்ளும் முன்பே!

குருதி உள்ளே உறையும் முன்பே!
உறுதியும் கொஞ்சம் குறையும் முன்பே!
கருதிய கருமம் முடிக்கும் அவனையென்
இறுதி நாளுக்குள் வரச் சொல்லேன்!!!

7 comments: