Wednesday, 5 December 2012

இனியவை நாற்பது.. பாடல் 3


3. ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
   நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
   ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
   தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.
பதவுரை 

ஏவது மாறா - வேலைகளைக் கூறிய படிச் செய்யும் (ஏவுதல் மாறாத )
இளங்கிளைமை - பணியாட்களைக் கொண்டிருத்தல் 
முன்இனிது - முற்பட இனிது ;
நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய்,
நாளும் கற்றல் - நாள்தோறும் கற்றல்,
மிக இனிது -;
ஏர் உடையான் - (தனக்கென) உழுமாடுகளையுடையானது,
வேளாண்மை - பயிர்த்தொழில்
இனிது -;
ஆங்கு - அதுபோல ,
தேரின் - ஆராயின்,
திசைக்கு - தான் செல்லும் திசையில்,
கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல்,
இனிது -

தெளிவுரை 
      சொன்ன வேலைகளைச்சொன்னபடியே தெளிவாய் மாற்றமில்லாமல் முடிக்கிற வேலைகரைகளைப் பெற்றிருப்பது இனிமையானது. எந்த குற்றங்களிலும் ஈடுபடாமல் கற்றலில் கவனம் செலுத்துவது அதைவிட இனிமையானது. உழவுத் தொழில் செய்பவர் தனக்கென சொந்தமாக ஏர் கலப்பை மற்றும் உழு மாடுகள் போன்ற தேவையானவற்றைக் கொண்டிருப்பது இனிமையானது. ஆராய்ந்து  பார்த்தால்  செல்கிற இடங்களில் நன்கு பழகி மக்களை நண்பர்களாக்கிக் கொள்வது  மிக இனிமையானது.
இங்கே பணியாட்கள் திறமையனவ்ர்களாய் இருப்பதும் குற்றங்களில் ஈடுபடாமல் நன்கு படிப்பதும் தொழில் செய்பவருக்குத் தேவையான கருவிகள் சொந்தாமாக இருப்பதும் எங்கு சென்றாலும் அன்பாகப் பழகி நட்பு கொள்வதும் இனிமை தருவன என்று உணர்த்துகிறார் பூதஞ்சேந்தனார். 

1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி அய்யா 🙏🙏🙏

    ReplyDelete