Saturday, 25 May 2019

ஞானம் (wisdom) என்னும் 68 வயதுப் பறவை

எந்தப் பறவை அதிக ஆண்டுகள் வாழும் என்ற கேள்விக்கான விடை தான் இப்பதிவு.

மனிதர்களுக்குத் தெரிந்து இயற்கையில் வாழும் பறவைகளில் ஞானம்(wisdom) என்னும் பெயர் கொண்ட லெய்சேன் அல்பட்ராசு (Laysan Albatross) இனத்தைச் சார்ந்த பறவை தான் மிகவும் வயதான பறவை. 68 வயதான இப்பறவை 2018 ஆம் 37 வது முறையாக முட்டை வைத்துக் குஞ்சு பொரித்தது.

பொதுவாகவே லெய்சேன் அல்பட்ராசு பறவைகள் அதிக வாழ்நாள் கொண்டவை. 50,60 வயதைத் தாண்டிய இந்த இனப்பறவைகள் நிறைய இருக்கின்றன. தன் வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் வாழும் பறவை இது. ஆண்டுக்கு ஒரேயொரு முட்டையை மட்டுமே வைத்து அடை காக்கும் இப்பறவைகள். ஆண் பெண் இரண்டுமே முட்டையை அடைகாத்தல், குஞ்சுகளுக்கு உணவு தேடல் என அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொள்ளும். கிட்டத்தட்ட குஞ்சுகளுக்காக 7 மாதம் செலவிடுவதால், பெரும்பான்மையான பறவைகள் ஆண்டுதோறும் முட்டையிடுவதில்லை, விட்டுவிட்டே முட்டையிடுகின்றன. தன் வாழ்நாளில் 90 சதவிகிதத்தை கடலில் கழிக்கும் இப்பறவைகள் முட்டையிடும் காலங்களில் தான் பிறந்த இடத்திற்கே திரும்பி வருகின்றன. பென்குயின்களைப் போலவே கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அல்பட்ராசுகள் சேர்ந்து ஒரே இடத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. 

ஞானத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1956 ஆம் ஆண்டு உயிரியலாளர் சேண்ட்லர் ராபின்சு ( Chandler Robbins) கிட்டத்தட்ட ஐந்து வகையான ஞானத்தின் காலில் அடையாளப்பட்டையை மாட்டினார். 46 ஆண்டுகள் கழித்து 2002 ஆம் மீண்டும் ஞானத்தைப் பார்த்த போது தான் அவருக்குத் தெரிந்தது முதலாம் ஆண்டு தான் அடையாளப்படுத்திய 8,400 பறவைகளில் ஒன்று தான் இது என்று. தனது 97 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். அவர் அடையாளப்படுத்திய ஞானம் இன்னும் உயிருடன் இருக்கிறது. கூடவே பறவையாளர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஞானத்தின் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம் லெய்சேன் அல்பட்ராசு இனத்தைப் பற்றிய பல புரிதல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.  Midway Atoll வனவிலங்குகள் சரணாலயத்தில் 2018 ஆம் ஆண்டு ஞானம் 37 வது முறை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து தன் இணையுடன் அதனை வளர்த்து வருகிறது. என்ன வியப்பு என்றால் 2001 ஆம் பொரித்த ஞானத்தின் குஞ்சுவொன்று, இந்த முறை முதன்முறையாகத் தான் பிறந்த இடத்திற்கே வந்து முட்டையிட்டிருக்கிறது.

அமெரிக்க மீன் மற்றும் கானுயிர் சேவகத்தைச் சார்ந்த உயிரியலாளர் கெல்லி குடேல் (Kelly Goodale) தனது வலைப்பூவில் சொன்னதாவது "Midway Atoll இல் இருக்கும் அல்பட்ராசு வாழ்விடமானது பல மில்லியன் அல்பட்ராசு பறவைகளை மட்டுமல்ல பல தலைமுறைகளையும் பல குடும்பங்களையும் உள்ளடக்கியது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன், அடுத்த முறை ஞானம் இந்த இடத்திற்கு திரும்பி வரும்போது தனது குஞ்சுகளோடும் அவற்றின் குஞ்சுகளோடும் சூழப்பட்டு இருக்கும்"

No comments:

Post a Comment