Monday, 17 March 2014

தமிழிலக்கணம்- 1 (இரட்டைக்கிளவி)

"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ"













'இப்படி ஜீன்ஸ் படத்துல வர மாறி சொன்ன தமிழ் இலக்கணம் எவ்ளோ நல்லா இருக்கும்!!! இப்படி நினைக்கறவங்களுக்கு கொஞ்சம் எளிமயா நியாபகம் வச்சுக்க சுலபமா ஒரு பகுதி எழுதுன என்னனு நினைச்சு தான்' இதை எழுத ஆரம்பித்துள்ளேன்.

இலக்கணம் ஐந்து வகைப்படும் என்று தொடங்கினால், இந்த புள்ள ஆறாவது தமிழ் இலக்கணத்த அப்படியே எழுதுது என்று தோன்றிவிடும்.

அப்பொழுது எங்கிருந்து தொடங்கலாம்??
இரட்டைக்கிளவில இருந்தே ஆரம்பிக்கலாம்.
இரட்டைக்கிளவி என்னனு எங்களுக்குத் தெரியாதா?? இத எழுதறதுக்கு ஒரு தொடரா?? என்று கடியாகாதீர்கள். எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். எடுத்ததும் "ஒன்றிய வஞ்சித்தளை", "கொண்டுகூட்டு பொருட்கோள்" என்று தொடங்கினால் இது ஒத்துவராதுபா என்று பலரும் படிக்கமாட்டார்கள். அதனால் தான், தெரிந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று இரட்டைக் கிளவியில் தொடங்குகிறேன்.

இரட்டைக் கிளவி:

"சல சல" இது தாங்க இரட்டைக்கிளவி. "சல" க்கு பொருள் இல்லை. இப்படி இரண்டு பொருள் இல்லாத சொற்கள் சேர்ந்து வருவது தான் இரட்டைக்கிளவி. (கிளவியா? அது யாரு? பக்கத்து வீட்டு பாட்டியா? என்று கேட்காதீர்கள். இந்த கிளவிக்கு சொல் எனப் பொருள். கிளவி- சொல்). ஆக பொருள் இல்லாத இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருள் தருவது தான் இரட்டைக்கிளவி. அவற்றை பிரித்தால் பொருள் இல்லை.
இவை வினைக்கு அடைமொழியாய் வரும். அதாவது ஒரு செயலின் தன்மையைக் குறிக்க பயன்படும்.

எடுத்துக்காட்டு:
'பள பள'க்குது புது நோட்டு...
திருதிரு துறுதுறு...
“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ”- இது என்ன படப் பாட்டுடா என்று யோசிக்காதீர்கள். இது திருப்புகழ் பாட்டு.
(அப்ப அப்ப கொஞ்சம் இலக்கியத்தையும் சேர்த்துகலாம்.)

"இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.". இது நன்னூல் சூத்திரம்.

இங்கு ஒரு ஐயம் (சந்தேகம்) எழலாம்.
"துடி துடித்து போனான்"- இதில் துடித்து என்பதற்கு தனியே பொருள் உண்டு தானே. பின் இது எப்படி இரட்டைக் கிளவி??? ஆனால் முன்னால் உள்ள 'துடி' என்பதற்கு இங்கு  தனியே பொருள் இல்லை. மேலும் இது வினைக்கு அடைமொழியாக வருகிறது. அதனால் இது இரட்டைக் கிளவி.

இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

"திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு”-திருப்புகழ்.
"மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்" -திருப்புகழ்.
"நெறிவு கலகலென வாசம் வீசுகுழ" - திருப்புகழ்.
"சலசல மும்மதம் பொழிய” - சீவக சிந்தாமணி
“கலகல, கூஉந்துணை யல்லால்” -நாலடியார்
“குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” - புறநானூறு
“வற்றிய வோலை கலகலக்கும்” -நாலடியார்.

பி.கு: இலக்கண நாட்டம், அறிவு இவை உடையவர்களுக்கும், இலக்கணம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும் பொதுவாகவே இந்தத் தொடரை எழுதுகிறேன். முழு மூச்சாக மொத்த இலக்கணப் படுதியையும் எழுதிவிட வேண்டும் என்ற அவாவில் எழுதுகிறேன். எப்படியெல்லாம் தமிழை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கலாம் என்று நான் எண்ணினேனோ அப்படியெல்லாம் இந்தத் தொடரை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள். பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
நன்றி
சுபாசினி.




10 comments:

  1. விளக்கம் நன்று... மிகவும் எளிமை இனிமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அருமை சகோதரி.... :)

    ReplyDelete
  3. FINE. WISHING U FOR YOUR EFFORT.

    ReplyDelete
  4. good job..1keep it up..!will be useful for us..!

    ReplyDelete
  5. உதாரணம் நன்று!!!

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி.. இணைந்தே இருங்கள். தொடர்ந்து கருத்துக்களைப் பகிருங்கள். :)

    ReplyDelete
  7. Nalla Pani.. Vazhthukkal..

    ReplyDelete
  8. Nanru .தொடருங்கள்!!

    ReplyDelete
  9. தயவு செய்து தொடருங்கள்.

    முடிந்தால் வாழ்த்துகள் சரியா இல்லை வாழ்த்துக்கள் சரியா என்பதையும் விளக்கவும்

    ReplyDelete
  10. உலகமெலாம் தேமதுர தமிழ் பரவச் செய்குவோம். நல்ல பணி. தொடர்க

    ReplyDelete