Friday, 30 November 2012

இனியவை நாற்பது...பாடல்-1


1. பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு
பதவுரை 
பிச்சை புக்கு ஆயினும் -  பிச்சை எடுத்து உண்டாவது 
கற்றல் - கற்றுக்  கொள்வது 
மிக இனிது - மிகவும் இனிமையானது.
நல் சவையில் -  நல்ல சபையில் 
கைக்கொடுத்தல் -  தமக்கு வந்து உதவுதல் 
சாலவும் - மிகவும்,
முன் இனிது - முற்பட இனிமையானது 
முத்து ஏர் முறுவலார் - முத்து  போன்ற பற்களை உடைய பெண்களது 
சொல் - பேச்சு 
இனிது -  இனிமையானது 
ஆங்கு - அது போல
மேலாயார்ச் சேர்வு - அறிவிற் சிறந்த பெரியவர்களைத் துணையாக கொள்ளுதல் 
தெற்றவும் இனிது -  தெளிவான இனிமையுடையது.

 தெளிவுரை 
           
             பிச்சை எடுத்தாவது கற்பது மிக இனிமையுடையது. இதனை ஒளவையார்                "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கற்றுக் கொண்ட கல்வி, படித்த மக்கள் உள்ள சபையில் கைகொடுத்து உதவுதல் மிகவும் இனிமையுடையது. முத்து போன்ற பற்களை உடைய பெண்களது வாயிலிருந்து வருகிற சொற்கள் இனிமையுடையது. அது போல அறிவிற்  சிறந்த பெரியோர்களைத்  துணையாக கொள்ளுதல்.  
கல்வியின் முக்கியத்துவம் இங்கு குறிப்பிடப்படுகிறது. அக்கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்தெளிவாக கற்க வேண்டும். இதை வள்ளுவர் கற்க கசடற என்கிறார். இவ்வாறு குற்றமில்லாமல் கற்ற கல்வி அறிவுடையோர் நிரம்பிய இடத்தில் கற்றவருக்கு சரியாக உதவ வேண்டும். இது மிக இனிமையானது.
 சான்றாக படித்து முடித்தவர் தனது  வேலைக்கான நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவது.
மென்மையாக சிரிக்கின்ற பெண்களின் பேச்சு இனிமையானது. வாழ்க்கைப் பாதையில் நெடுந்தூரம் பயணம் செய்த  பெரியவர்கள் இளையவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி. அதனால் தான் அத்தகைய பெரியவர்களைத் துணையாகக் கொள்வதை இனிமை என்றார்.  

No comments:

Post a Comment