Friday, 30 November 2012

இனியவை நாற்பது...பாடல்-1


1. பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு
பதவுரை 
பிச்சை புக்கு ஆயினும் -  பிச்சை எடுத்து உண்டாவது 
கற்றல் - கற்றுக்  கொள்வது 
மிக இனிது - மிகவும் இனிமையானது.
நல் சவையில் -  நல்ல சபையில் 
கைக்கொடுத்தல் -  தமக்கு வந்து உதவுதல் 
சாலவும் - மிகவும்,
முன் இனிது - முற்பட இனிமையானது 
முத்து ஏர் முறுவலார் - முத்து  போன்ற பற்களை உடைய பெண்களது 
சொல் - பேச்சு 
இனிது -  இனிமையானது 
ஆங்கு - அது போல
மேலாயார்ச் சேர்வு - அறிவிற் சிறந்த பெரியவர்களைத் துணையாக கொள்ளுதல் 
தெற்றவும் இனிது -  தெளிவான இனிமையுடையது.

 தெளிவுரை 
           
             பிச்சை எடுத்தாவது கற்பது மிக இனிமையுடையது. இதனை ஒளவையார்                "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கற்றுக் கொண்ட கல்வி, படித்த மக்கள் உள்ள சபையில் கைகொடுத்து உதவுதல் மிகவும் இனிமையுடையது. முத்து போன்ற பற்களை உடைய பெண்களது வாயிலிருந்து வருகிற சொற்கள் இனிமையுடையது. அது போல அறிவிற்  சிறந்த பெரியோர்களைத்  துணையாக கொள்ளுதல்.  
கல்வியின் முக்கியத்துவம் இங்கு குறிப்பிடப்படுகிறது. அக்கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்தெளிவாக கற்க வேண்டும். இதை வள்ளுவர் கற்க கசடற என்கிறார். இவ்வாறு குற்றமில்லாமல் கற்ற கல்வி அறிவுடையோர் நிரம்பிய இடத்தில் கற்றவருக்கு சரியாக உதவ வேண்டும். இது மிக இனிமையானது.
 சான்றாக படித்து முடித்தவர் தனது  வேலைக்கான நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவது.
மென்மையாக சிரிக்கின்ற பெண்களின் பேச்சு இனிமையானது. வாழ்க்கைப் பாதையில் நெடுந்தூரம் பயணம் செய்த  பெரியவர்கள் இளையவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி. அதனால் தான் அத்தகைய பெரியவர்களைத் துணையாகக் கொள்வதை இனிமை என்றார்.  

Thursday, 29 November 2012

இனியவை நாற்பது...கடவுள் வாழ்த்து


கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச் 
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
பதவுரை 
கண்  மூன்றுடையான் : மூன்று கண்களை உடைய சிவபெருமான்.
தாள் : கால் (அடிகள்)
சேர்தல் : அடைதல் 
கடிது : மிக 
இனிது : இனிமையானது 
தொல் : பழமையான 
மாண் : மதிப்புடைய 
துழாய் மாலையானை : துளசி மாலை அணிந்த திருமால்(விஷ்ணு)
தொழல் : கைகளை சேர்த்து வணங்குதல் 
இனிதே : இனிமையானது
முகம் நான்கு உடை யானை - நான்கு முகங்களையுடைய பிரமதேவனை,
சென்று (அவன் திருமுன்) சென்று,
அமர்ந்து - மேவியிருந்து,
பேணி ஏத்தல் - விரும்பி வாழ்த்தல்,
முந்துற இனிது - முற்படவினிது.

தெளிவுரை 
மூன்று கண்களையுடைய (மூன்று கண்கள் : சூரியன், சந்திரன், நெருப்பு.) சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான துளசி மாலை மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது. இந்த பாடலில் மூன்று விதமான வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை  சேர்தல், ஏத்தல், தொழல்  என்பன  ஆகும்.  இவை  இறைவனை  மனதினாலும் சொல்லினாலும்  செயலாலும் வழிபடுகிற  திரிகரண வழிபடு முறைகள்.
            இறைவனை உள்ளத்தில் வைத்து சொல்லாலும் செயலாலும்  போற்றி வணங்குவதே  இனியது என்பதையே இந்தச்  செய்யுள் உணர்த்துகிறது.

Wednesday, 28 November 2012

பன்னித் தமிழ் வேண்டாம்


கன்னித்தமிழை பன்னித் தமிழாய் மாற்றுகிறோமே.. இது சரியா???
like பன்னி
comment பன்னி
share பன்னி
post பன்னி
type பன்னி
live பன்னி
learn பன்னி
study பன்னி
eat பன்னி
sleep பன்னி
travel பன்னி
cut பன்னி
copy பன்னி
paste பன்னி...
தமிழை kill பன்னி..
இப்படி பன்னி பன்னி தமிழை ஏன் கொலை செய்ய வேண்டும்???
அனைத்திற்கும் தமிழ் பதங்கள் உண்டு.. அரிந்து பயன்படுத்துவோம்.. இப்படி ஆங்கில வார்த்தையுடன் பன்னி சேர்த்து பேசுவதினால் நம்மை ஆங்கில மேதை என்று யார் சொல்ல போகிறார்கள்... மாறாக அந்த மொழியையும் சேர்த்து கெடுப்பது தான் மிச்சம். ஆங்கிலம் நாட்டம் இருந்தால் ஆங்கிலத்தில் முழுவதுமாக பேசலாம்.. தவறு இல்லை.. இப்படி பன்னித் தமிழ் பேச வேண்டாம். ஒப்புக்கொண்டால் பகிருங்கள். இல்லையெனில் மன்னியுங்கள்.