Friday, 24 May 2013

மிட்டாய்கள் நாணயங்களாய் மாறிப்போனது ஏன்???

கடையில் எது வாங்கினாலும் கூட இரண்டு மிட்டாய் இலவசம்.. கேட்ட சில்லரை இல்லை என்று சொல்லுவார்கள்…
பணப்புழக்கம் உள்ள இடங்களான அஞ்சலகங்களில் கூட ‘சில்லரை இல்லாம ஏன்ய வறீங்க’ என்று கேட்கும் நிலை. பேருந்துகளில் மிகவே மோசம், என் கிட்ட சில்லரை இருந்த கொடுக்க மாட்டேனாப்பா என்று நடத்துனர் சில்லரகளே இல்லாத பையைக்காட்டும் போது தர்ம சங்கடம் தான். மருந்துகமோ அடுமனையோ எங்கு போனலும் மிட்டாய் கொண்டு பை நிறைக்கும் நிலை வரக்காரணம் என்ன??
என்ன இந்த திடீர் சில்லரைத் தட்டுப்பாடு பெரும் பூதமாகிவிட்டது, இதன் பாதிப்புகள் என்ன? ஏன் இந்த தட்டுப்பாடு என்று கொஞ்சம் அலசிப்பார்போம்..

ுதலாவதாக நமக்கு எழும் கேள்வி, நாணயமடித்தல் குறைந்துவிட்டதா? தேவைக்கு ஏற்றபடி நாணயங்கள் அடிக்கப் படுவதில்லையா?? என்பவை தான். தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக பெறப்பட்டத் தகவலின் மூலமாக மனோரஞ்சன் ராய் " பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அடிக்கபட்டதை விட தற்பொழுது இரண்டு மடங்காக ஒரு ரூபாய் நாணயங்களை அடிக்கும் பணி அதிகரித்துள்ளது. அதே போலவே ஐந்து ரூபாய் நாணயங்களும் அதிக அளவில் அடிக்கப்படுகின்றன. இரண்டு ரூபாய் நாணயங்கள் அடிக்கும் பணி 3.5 மடங்கு உயர்ந்துள்ளது. அதே போல் 2001-02 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 1,547 கோடி ஒரு ரூபாய் நாணயங்களையும், 1,1064 கோடி இரண்டு ரூபாய் நாணயங்களையும், 2,025 கோடி ஐந்து ரூபாய் நாணயங்களையும், வெளியிட்டுள்ளது. ஆக 1970 ல் இருந்து 2012 வரைக்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1,02,640 கோடி 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒரு நாணயத்தின் ஆயுட்காலம் 25-30 ஆண்டுகள் என்று கொண்டாலும் இன்றைக்கு நிலைக்கு ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் 100 நாணயங்கள் இருக்க வேண்டும். இதெல்லாம் எங்கே போயிற்று?"
இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி கூறும் போது, " நாணயங்கள் அடிப்பது குறைந்துவிட்டதால் இந்த தட்டுப்பாடு எழவில்லை. நாணயங்களை வெளியிடுவதில் உள்ள நடை முறை சிக்கல்களை சிலர் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது தான் இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம். இதைத் தடுக்க நாடு முழுவது நாணயங்களை மாற்றிக்கொள்ள வசதியாக மையங்கள் அதிகரிக்கப்படும் "  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக இப்பொழுது அச்சாகி வெளிவரும் நாணயங்கள் என்ன ஆகின்றன என்பது தான் கேள்வி.

1. இந்திய ரிசர்வ் வங்கி தலைமையக வாசலில் தினசரி முதல் ஆளாக சென்று ரூபாய் தாள்களுக்கு இணையாக நாணயங்களைப் பெற்றுக்கொள்ளும் இந்த கும்பல் அதை வியாபாரிகளிடம் 12-13 % இலாபதிற்கு விற்கின்றனர். நாணயங்களை முடக்கி வைப்பதின் மூலம் இந்த கும்பலுக்கு இலாபம் கூடுகின்றது. பெரு நகரங்களிள் ஏற்படும் சில்லரைத் தட்டுப்பாட்டிற்கு இது முக்கிய காரணம்.

2. சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி செய்திகளில் பேசப்பட்ட செய்தி இது.  சவர அலகு (RAZOR BLADE) செய்வதற்காக நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான். நாணயங்களை உருக்கிவார்த்து செய்யப்படும் இந்த சவர அலகுகள் நாணாயங்களின் மதிப்பை விட அதிகம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த இலாபம் கிடைக்கிறது. இதனைத் தடுக்கத் தான் நாணயங்களின் அளவைச் சிறியதாக்கியது.
எடையக் குறைப்பதன் மூலம் இந்த குற்றம் சிறிதளவு குறைந்துள்ளதே தவிர இது முற்றிலுமாக ஒழிக்கப்படாவில்லை. இன்றும் அதனால் இலாபம் இருக்கத்தான் செய்கிறது.

3. இது தான் மிக முக்கியக் காரணம். அங்காடி நடத்துபவர்கள் தங்கள் சொந்த இலாபதிற்காக சில்லரை இல்லை என்று வேண்டுமென்றே கூறுகின்றனர். ஐந்து ரூபாய் மீதம் தர வேண்டுமென்றால் இரண்டு ரூபாய் நாணயமும் கூட மூன்று ரூபாய்க்கு கடலை மிட்டாயும் கொடுப்பதனால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் இலாபம் கிடைக்கிறது. மளிகைக்கடைத் தொடங்கி பல்பொருள் அங்காடி வரை சில்லரை இல்லை என்று கூட சொல்லாமல் விற்றுப் போகாத பழைய மிட்டாய்களை நம் தலையில் கட்டிவிடுகின்றனர்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படிகிறது. மக்கள் நாம் நினைப்பதவிட அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தொடர்வண்டிகளில் இந்த சில்லரைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க கட்டனங்களை ஐந்தின் பெருக்காக மட்டும் மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இது சிறு வணிகர்களிடமும் காணப்படுகிறது. நான்கு ரூபாய் பெருமானம் உடைய பொருட்களை சில்லரைத் தட்டுப்பாட்டால், ஐந்து ரூபாய்க்கு விற்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு நட்டம் தான்.


போனது போகட்டும் இந்த சில்லரைத் தட்டுப்பாட்டைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கட்டும். அதுவரை இதிலிருந்து தப்ப என்ன வழி???

1. கூடிய மட்டும் நாம் சில்லரைகளை எடுத்துச் சென்று சரியான சில்லரை கொடுத்து பொருள் வாங்கலாம்.
2. சில்லரைக்குப் பதிலாக நாம் வாங்கும் பொருள்களை கொஞ்சம் சேர்த்து வாங்கலாம், அல்லது அதியாவசிய பொருட்களான எழுதுகோள் போன்றவற்றை வாங்கலாம்


 இல்லை மிட்டாய் தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கும் கடைக்காரர்களுக்கு பதிலுக்கு நாமும் மிட்டாய்களையே சில்லரையாக கொடுக்கலாம். கொடுத்துப் பாருங்கள்.. முகம் மாறிவிடும் அவர்களுக்கு, உடனே சரியான சில்லரை உங்களுக்குக் கிடைக்கும்...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

-----
என்றும் அன்புடன்,
சுபாசினி.
1 comment: