Thursday, 1 November 2012

தமிழ்த்தாய் வாழ்த்து:(உடன் பொருளும் விளக்கமும்):
பள்ளி சென்ற காலத்தில் இருந்து நாம் பல முறை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து.
பதம் உணர்ந்து, பொருள் உணர்ந்து இனி அதைப்பாடுவோம்.

பாடல்:

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !
                                                                   தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே !
                        வாழ்த்துதுமே !
                        வாழ்த்துதுமே !
                                    - மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பத உரை:
ஆரும்- ஒலிக்கும்
மடந்தை- பெண்
எழில்- அழகு
பிறைனுதல்- பிறை போன்ற நெற்றி
தரித்த- அணிந்த
நறும்- வாசனை
அணங்கு- பெண்.


பாடலைப் பிரித்துப் பொருள்கொள்ளும் முறை:

நீர் ஆரும் கடல் உடுத்த நிலம் மடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனம் என திகழ்பரதக் கண்டம் அதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


விளக்கம்:

ஒலி எழுப்பும் கடலை ஆடையாக உடுத்துகின்ற நிலமாகிய பெண்ணின் அழகு ஒளிருகின்ற சிறப்பு பொருந்திய முகமாக திகழ்வது பரதக்கண்டம். அதில் தெற்கு நாடுகள் பிறை போன்ற நெற்றியாகும். அவற்றில் சிறந்த திராவிட நாடு அந்த பிறை போலும் நெற்றியில் நல்ல மணம் பொருந்திய திலகமாக திகழ்கிறது. அந்த திலகத்தின் வாசனை போல அனைத்து உலகமும் இன்புற்றிருக்க எல்லாத்திசைகளிலும் புகழ் மணக்க இருக்கின்ற (புகழ் பெற்ற) தமிழ் ஆகிய பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் திறத்தைக் கண்டு எங்கள் செயலை மறந்து வாழ்த்துகிறோம்.

பி.கு: இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. கடலுடுத்த நிலம், திகழ் பரதம் ஆகியவை வினைத்தொகைகள். அஃதாவது அந்த வினைச்சொற்கள் முக்காலத்திற்கும் பொருந்தி வரும்.(திகழ்ந்த பரதம், திகழ்கின்ற பரதம், திகழும் பரதம் எனக் கொள்ள வேண்டும்). இப்படி நிலத்தைப் பற்றியும், பாரதத்தைப்பற்றியும் முக்காலத்திற்கும் பொருந்த சொல்லி, தமிழப்பற்றி சொல்லும் போது 'இருந்த' என இறந்த காலத்தில் கவிஞர் குறிப்பிட்டது உள்ளூர வருத்தாமகவே உள்ளது. (சுபாஷினி)மனோண்மணீயம் நூலில் உள்ள முழுப்பாடல்:

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !


பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
 எல்லைஅறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும் 
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் 
சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

English Translation from Wikipedia:


The Authentic English translation of the above song is as follows: "Bharat is like the face beauteous of Earth clad in wavy seas; Deccan is her brow crescent-like on which the fragrant 'Tilak' is the blessed Dravidian land. Like the fragrance of that 'Tilak' plunging the world in joy supreme reigns Goddess Tamil with renown spread far and wide. Praise unto You, Goddess Tamil, whose majestic youthfulness, inspires awe and ecstasy.Sriniketan

5 comments:

 1. சுபா.....
  நம் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஆசிரியர் குறிப்பிட்ட கடலுடுத்த நிலம்,
  திகழ்பரதம் என்றவை முக்காலத்தும் வரும். இருந்த பெரும்தமிழ் என்று
  இறந்த காலத்தில் கூறியதாய் கலக்கம் அடையாதே...
  அவர் கடலுடுத்த நிலம், திகழ்பரதம் என்று அவற்றை அஃறிணையாக
  குறித்துள்ளார். ஆனால் தமிழைத் தாயாய் போற்றியதால் தான் இருந்த பெரும் தமிழ் என்றார்.
  அவள் உயிருள்ளவள். அன்று முதல் என்று வரை இருந்தாலுகின்ற பெண்ணாக தமிழை
  உருவகபடுத்தியுள்ளார் அதனால் தான் இருந்த பெரும் தமிழ் அணங்கே என்றார்.
  இதற்கு நீ வருந்த வேண்டாம் மகளே.. சுந்தரனார் சுத்த தமிழ் பற்றாளர்.
  இவண்
  உன் அன்பு அண்ணன்
  பிரசன்னா

  ReplyDelete
 2. கடலுடுத்த நிலம் - இறந்தகாலப் பெயரெச்சம்.

  ReplyDelete
 3. அருமையான விளக்கம். உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. கடல்க் கோள் கொண்டது போக மீதமுள்ள நிலத்தை குறிப்பதால் இறந்த காலத்தில் எழுதியிருப்பாரோ?

  ReplyDelete
 5. அந்தகாலத்திலேயே என் அம்மா நல்ல கல்விகற்று அறிவுடையவளாக இருந்தாள் என்றால், இன்று அப்படி இல்லை என்று பொருள் படாது. அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் வளர்ச்சி பெற்று என்றுதான் பொருள் படும்.

  ReplyDelete